பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது.
இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுவாமியும் அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வருவர்.
இந்தத் தேரை அனைத்து சமுதாயத்தினரும் வடம் பிடித்து இழுப்பது வழக்கம். ஆனால், தேரின் பின்புறம் சன்னக்கட்டை இருபுறமும் போட இரண்டு சமுதாயத்தினர் இடையே கடும் போட்டி இருந்து வந்தது.
இந்நிலையில், இரு சமுதாயத்தினரையும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகரன், தனது அலுவலகத்தில் அழைத்துப் பேச முடிவு செய்து, இன்று மாலை அழைத்திருந்தார்.
இந்த அழைப்பில், பட்டியலின மக்களை தனிப்பட்ட ஜாதிப்பெயரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பிரிவினர், ‘தங்கள் சமுதாயத்தினருக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஜாதிப் பெயரையும், மற்றும் தெருக்களின் பெயரையும் குறிப்பிட்டு உங்களுக்குள் சண்டை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டித்து, கூட்டத்தை புறக்கணித்து, ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலக வாயிலில் அப்பிரிவினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவி ஆணையர் ராஜ்குமார் தலைமையில், ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், ‘நாளை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும்’ என்றும் தெரிவித்தனர். அதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இச்சம்பவத்தால் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.