தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகியவை நடந்தது. சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்தது . இவ்விழாவுக்கு வைத்தியநாதன்பேட்டை ஊராட்சித் தலைவர் சம்பந்தம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி வரவேற்றார். உதவி ஆசிரியர் மாறன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிறுதானிய பயிர்களை கொண்டு முளைப்பாரியை சீராக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். பள்ளிக்கு வந்தவர்களுக்கு ஆசிரியர்கள் திலகமிட்டு வரவேற்றனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சிறுதானியங்களை கொண்டு தோட்டம் அமைத்தல் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது வீடுகளில் தயார் செய்து எடுத்து வந்த 100க்கும் அதிகமான சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து
சிறுதானிய உணவு வகைகளை தயார் செய்த மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டப்பட்டனர். மதிய உணவாக சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திருவையாறு வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின்ஜோனா, தங்கதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞானம், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லட்சுமிபிரியா மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர். பள்ளி உதவி ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.