Skip to content
Home » திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் பாண்டியன் என்பவர் கடந்த 13ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு 103 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இது தொடர்பாக பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் கரூர் நகர காவல் ஆய்வாளர் 5 ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அமராவதி ஆற்று படுகையில் கையில் பையுடன் வந்து கொண்டிருந்த நபர்,

போலீசாரை கண்டதும் மீண்டும் முட்புதர்களில் ஓடி மறைந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்த போது திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (34) என்று தெரியவந்தது.

மேலும், அவரது பையில் திருட்டு நகைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த நகைகள் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் திருடிய நகைகள் என்றும், மேலும் கடந்த 14ஆம் தேதி கரூர் – ஈரோடு சாலையில் உள்ள சோழன் நகரில் உள்ள வீட்டில் திருடிய நகைகள் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 105 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் அந்த நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒட்டியானம், ஆரம், தோடு உள்ளிட்ட 105 புவுன் நகைகள் பத்திரிகையாளர்கள் முன் காண்பிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், நகைகளை திருடிய பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருட்டு சம்பவம் நடைபெற்று ஏழு நாட்களுக்குள் குற்றவாளியை கண்டுபிடித்த கரூர் நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *