திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லட்டு சர்ச்சையை விசாரிக்க ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா திரிபாதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று திருப்பதி வந்த விசாரனை குழு நெய் கலப்படம் தொடர்பான 2-வது நாளாக இன்றும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக எஸ்ஐடி மூன்று குழுக்களாக பிரித்து இன்று விசாரணை நடத்துகிறது. டிஐஜி கோபிநாத் ஜெட்டி, எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு, கூடுதல் எஸ்.பி. வெங்கடராவ் ஆகியோர் 3 குழுக்களாகப் பிரிந்து விசாரிக்கின்றனர்.இதில் தேவஸ்தான கொள்முதல் பொது மேலாளர் முரளி கிருஷ்ணா அளித்த புகாரில் உள்ள குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அறங்காவலர் குழு முதல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பங்கு வரை அனைத்து அம்சங்களும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது. மேலும், நெய் கலப்பட வழக்கின் முழு விவரங்களை அறிய எஸ்ஐடி அதிகாரிகள் செயல் அதிகாரி ஷியாமளா ராவை சந்திக்க உள்ளனர்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு முதல்வர் சந்திரபாபுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் விதமாக விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.