ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அலிபிரி , ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைப்பாதைகள் வழியாக, பக்தர்கள் ஏழுமலையானை பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக 3 வயது சிறுவன் பெற்றோருடன் சென்று கொண்டிருந்தபோது, சிறுத்தை புலி ஒன்று வந்து சிறுவனை தாக்கி இழுத்து சென்றது. இதை கண்ட பக்தர்கள் அலறி அடித்து கூச்சலிட்ட நிலையில் , பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பக்தர்கள் சேர்ந்து கற்கள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தனர். இதையடுத்து சிறுத்தை புலி அங்கிருந்து ஓடியுள்ளது. பின்னர் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திருப்பதியில் சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை முடிவெடுத்தது. அதன்படி திருப்பதியில் அலிபிரியில் இருந்து கோயிலுக்கு மலை மீது பாத யாத்திரையாக சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் நேற்று நள்ளிரவில் சிக்கியது. சிறுத்தையை மருத்துவ பரிசோதனைக்குப் பின் அடர் வனத்திற்குள் விட வனத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.