திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மற்றும் மரக்காணத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அரசு 10 லட்சம் கொடுத்ததில், என்னால் பூ, பொட்டு வாங்க முடியுமா என கேட்கின்றனர். கள்ளச்சாராத்தால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் எல்லாம் மதுவிற்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 100 சதவீதம் நல்ல நோக்கத்தோடு மாநாட்டை நடத்துகிறோம். எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும் சொல்கிறேன். திட்டமிட்டு எந்த காயும் நகர்த்தவில்லை. மாநாட்டை அரசியலுடன் இணைத்து திரித்து பேசுகிறார்கள். மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு தி.மு.க.,வும் சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். 1977ம் ஆண்டில் இருந்து மத்தியிலும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் ஒரு பகிர்வு தருகிறார்கள். அதுபோல தமிழகத்திலும் ஒன்று நடப்பது தவறு அல்ல. கோரிக்கை எழுப்புவதும் தவறு அல்ல. 2016ம் ஆண்டு, இந்த கோரிக்கைகளை மையப்படுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தி இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று ஒரு கருத்தரங்கம் நடத்தி, ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் அதனை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம். கூட்டணி ஆட்சி விளிம்பு நிலை மக்களின் குரலாக இருக்கும். அதை தான் மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.