Skip to content

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

  • by Authour

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.  இதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாதா கோவில் தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.

இதில் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. இந்த நார்களால் காளைகளும், வீரர்களும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க சவுக்கு கட்டைகளால்

தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. வீரர்கள் காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டுடன் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர். மேலும் பெரிய மாட்டிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். விழாவிற்கு வருபவர்கள், விழாக்குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விழாக்குழு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவர்கள் அவற்றிற்கு உரிய சோதனைகளை மேற்கொண்டனர். மேலும் 401 மாடுபிடி வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருந்தனர். அவர்கள் போட்டி தொடங்கும் முன்  வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து இன்று காலை 7.15 மணியளவில் திருக்கானூர்பட்டி பங்குதந்தை தேவதாஸ் இக்னேசியர் முன்னிலை யில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தார்.  முதலில் கோயில் காளை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் விடப்பட்டன.  அடங்க மறுத்து திமிறிய காளைகளையும் வீரர்கள் மடக்கி பிடித்து பரிசுகள்பெற்றனர். சில காளைகள் பிடிபடாமல்  எல்லைக்கோட்டை  கடந்தது.

வல்லம் டிஎஸ்பி., நித்யா தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!