முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை (26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார். இந்த நிலையில், உதயகுமார் மற்றும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் (58) ஆகிய இருவரும் இன்று மாலை 3.10 மணியளவில் யானை அருகே நின்று கொண்டிருந்தனர்.அப்போது திடீரென ஆக்ரோஷமடைந்த தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. இதனை கண்ட உதயகுமார் தடுக்க முயன்றுள்ளார். இதனால் இருவரையும் யானை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.. யானை கட்டிய மண்டபத்திற்கு உதயகுமாரும், சிசுபாலன் இருவரும் யானைக்கு பழம் வழங்க சென்றுள்ளனர். அப்போது சிசுபாலன் யானையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஏற்கனவே மண்டபத்திற்குள் வெளி ஆளான சிசுபாலன் நுழைந்ததை கண்டதும், ஆக்ரோஷமான யானை, செல்பி எடுத்ததும் கோபமடைந்து அவரை தாக்கியுள்ளது. இதனைப்பார்த்த பாகன் உதயகுமார் யானையை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவரையும் துதிக்கையால் துாக்கி வீசியுள்ளது… எனினும் சிசிடிவி கேமிரா பதிவுகளின் அடிப்படையில் தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் கூறுகின்றனர்.