சென்னையில் ரயிலில் தவற விட்ட பயணிகளின் உடைமையை ரயில்வே துறையினர் மீட்டு திருச்சியில் உரியவரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட்டது. சிறிது நேரம் கழிந்த நிலையில், ரயில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயணச்சீட்டுகளை பரிசோதிக்கும் பணியிலிருந்தனர். அப்போது முன்பதிவு பெட்டியொன்றில், நுழைவாயில் அருகே ஒரு தோள் பை (ஷோல்டர் பேக்) கிடந்தது. அது குறித்து அந்த பெட்டியில் பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் புகழேந்தி, அங்கிருந்த பயணிகளிடம் கேட்டபோதும் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நிலையில், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பையை நவீன சாதனங்களின் உதவியுடன் சோதனை செய்தபோது, அதில் துணிகள் மட்டும்தான் இருந்தது. வெடிபொருள்கள் ஏதுமில்லை என்பதால் நிம்மதியடைந்தனர். அந்த பையில் அது யாருடையது என்பதை அறியும் வகையில் அதில் எந்த தடயமும் கிடையாது. எனவே அது யாரோ பயணியுடையதுதான் என உறுதிசெய்த அதிகாரிகள் அதை பயணச்சீட்டு பரிசோதகரின் பாதுகாப்பில் ஒப்படைத்தனர்.
ரயில் புதன்கிழமை அதிகாலை திருச்சி ஸ்ரீரங்கத்தை நெருங்கியபோது, இளம் பெண் ஒருவர் (ஹரினி}ஸ்ரீரங்கம்) தனது தந்தையுடன் சென்னையிலிருந்து பணிப்பதாகவும் அவர்களது உடைமையை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவரம் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிக்கெட் பரிசோதகர் புகழேந்தி தன்னிடம் ஒரு பை இருப்பதை கொண்டு வந்து காட்டியபோது, தங்களது உடைமைதான் என நன்றிகூறி பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் சுனில்போக்கட்டே மற்றும் பரிசோதகர் புகழேந்தி ஆகியோர் கூறுகையில், பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக எடுத்துசெல்வது அவசியம். உடைமைகளில் அவர்களது முகவரி தெரியும் வகையில் ஏதாவது வைப்பது அதைவிட அவசியம். அப்போது அதை உரியவரிடம் உடனே ஒப்படைக்க முடியும். இதுபோல நேரங்களில், அந்த பையில் வெடிகுண்டுகள் ஏதும் இருக்குமோ என்ற தேவையற்ற அச்சம், சோதனை, பதற்றம் ரயில்வே துறையினருக்கு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பயணிகள் நடந்துகொள்வது அவசியம் என்றனர்.