தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா வளையப்பேட்டை அருகே மாங்குடி யானையடி தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி வாணி(59). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26 தேதி இரவு சிதம்பரத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். மல்லுக செட்டி தெரு வில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் இருந்து கைப்பையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தொடர்ந்து வாணி கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் தனது கைப்பையை மர்மநபர்கள் பரித்து சென்று விட்டதாக புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கும்பகோணம், கோதண்டபாணி தெருவைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (23), கொரநாட்டுகருப்பூரை பகுதியை சேர்ந்த பிரசாந்த்(23) மற்றும் கும்பகோணம், மேலகாவேரி பகுதியை சேர்ந்த மகேந்திரன்( 22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்1-ல் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி தீர்ப்பளித்தார். அதில் ராஜேஷ்கண்ணன், பிரசாந்த், மகேந்திரன் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.