சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் மெரினா லூப் சாலையில் இருந்து அடையாறு பகுதிக்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, மழை பெய்வதால் கொஞ்சம் நேரம் ஆட்டோவில் அமர்ந்து கொள்வதாக கூறி ஆட்டோவில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் போதையில் இருந்த 4 பேரும் சாந்தியை கீழே இறங்குமாறு கூறியதுடன் கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ ஓட்டுநரை அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் சாந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க கம்பல் மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது, சாந்தி தரமறுத்து கூச்சலிட்டதால் உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சாந்தி கூச்சலிட்டதால் கோபமடைந்த அந்த கும்பல் சாந்தியின் கழுத்தில் லேசாக வெட்டிவிட்டு
இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைக்க முயன்ற போது, மூன்று பேர் தப்பியோட ஒருவன் மட்டும் கடலை நோக்கி ஓடினான். ஆனால் போலீஸார் விடாமல் துரத்தி சென்று கடலில் இறங்கி அவனை பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அயனாவரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30) என்பதும் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் சந்தோஷ் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.