நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதேபோல் இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகின்ற 12-ஆம் தேதிவரை நடக்கிறது.
முக்கிய விழாக்களில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள்,தாயார்,ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன்,தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன்,கோவில் தலைமை எழுத்தர் உமா,கோவில் ஊழியர்கள், திருக்கண்ணபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழா நாட்களில் தங்க கருட சேவை,தங்க பல்லாக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும்,அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
12 -ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர்,கிராம மக்களும் செய்து வருகின்றனர்.