திருச்சி மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் தனது அவசர தேவைக்காக துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தினை தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினார். பின்னர் செல்லும் வழியில் அங்குள்ள பேக்கரி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்க சென்றார். ஸ்னாக்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதை பின் தொடர்ந்து நோட்டமிட்டு மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாண்டியன் துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டியன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.