கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி EB ஆபிஸ் அருகே நேற்று நள்ளிரவு 01.30 மணிக்கு இரண்டு போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது, திடீரென அதில் ஒருவர் நபர் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து காவலர்கள் மீது அடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அவர்களை மடக்கி பிடித்து அரவக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.
இருவரையும் விசாரணை செய்ததில், தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினத்தை சேர்ந்த கோகுல் (27), மற்றும் திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த கோகுல்நாத், (21) ஆகியோர்கள் என தெரியவந்தது. இருவரும் வைத்திருந்த பையை (Bag) சோதனை செய்ததில்,
அதில் 02 இரும்பு ராடுகள், திருப்புலி, மாஸ்க், கிளவுஸ், பெப்பர் ஸ்பிரே மற்றும் 02 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தனர்.
விசாரணையில் அவர்கள் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடுவதற்காக வந்தது தெரியவந்தது.
கோகுல் என்பவர் மீது திருச்சி, அரியலுர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 24 வழக்குகளும், கோகுல்நாத் என்பவர் மீது திருச்சி மாவட்டத்தில் 04 வழக்குகளும் உள்ளன. கரூர் நகர உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் (SD Crime Team) இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.