மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மணக்குடி பொறையன் ஆலயம் கோயிலில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட தனிப்படைப்பு போலீசார் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். கீழப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன்கள் வடிவேலு (24) பாபு(23) ஆகிய இருவரும் சேர்ந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கோவில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 4000 ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.