தஞ்சை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் ,வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ந்தேதி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தற்போது மண்டாலபிஷேக விழா நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பணம் நகைகள் காணிக்கையாக செலுத்துவதற்கு வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இந்த உண்டியல்கள் திறந்து பணம், நகைகள் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோயில் உண்டியலில் பணம் மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் கோயில் உண்டியலில் காந்தம் வைத்து அதன் மூலம் நூதன முறையில் பணம், நாணயங்களை திருட முயன்றார் . இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோயில் ஊழியர்கள் அங்கு சென்றபோது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காந்தத்தை வைத்து உண்டியலில் நூதன முறையில் பணம் திருட முயன்றது தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கங்காதரபுரம் மேல தெருவை சேர்ந்த ஐயப்பன் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐயப்பன் இதே போல் காந்தத்தை வைத்து இக்கோயில் உண்டியலில் பலமுறை ரூ.5 ஆயிரம் வரை திருடி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.