கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், நடுத்தெரு பகுதியில் மணி (54), லட்சுமி (52) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் மகள் ஒருவர் உள்ளனர். கரூர் மார்க்கெட் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.
மணி வழக்கம்போல் வியாபாரத்துக்கு சென்று விட்டார் லட்சுமி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் மகன் தினேஷ் கதவை பூட்டிவிட்டு சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த வீட்டை நோட்டமிட்டு கதவை சாவி போட்டு திறந்து திருட்டு ஆசாமி ஒருவர் உள்ளே சென்று, பீரோவை திறந்து வைத்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் உரிமையாளர் லட்சுமி திரும்பி வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத செருப்பு ஒன்று வாசலில் கிடந்ததை பார்த்து உள்ளே சென்றபோது, அந்த இளைஞர் பீரோவை திறந்துபார்த்துக் கொண்டிருந்ததை கண்டு, யார் என்று கேள்வி எழுப்ப உடனடியாக அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
லட்சுமி திருடன் திருடன் என்று கூச்சலிட்டபடி அந்த இளைஞரை பின்தொடர்ந்து வருவதை கண்டு, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திருடனை பிடிக்க முயன்ற போது தள்ளிவிட்டு ஓடியபோது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த வளைத்து பிடித்து கட்டி வைத்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ள பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அந்த இளைஞர் கரூர் வ.உ.சி தெருவை சேர்ந்த விஜய் என்பது தெரிய வந்துள்ளது.
பசுபதி பாளையம் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள்தான் இந்த வீடு உள்ளது. ஆனால் போதுமான பாதுகாப்பு இல்லாத ஒரு பகுதியாக இருக்கிறது. பட்ட பகலில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் இதே பகுதியில் இரண்டு சக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. போலீசார் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருகின்றனர் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் அந்த வீட்டில் பொருட்களை ஏதேனும் எடுத்துச் சென்றாரா என்பது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.