சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் எஞ்சின் பகுதியில் மட்டுமே சிறு சேதமடைந்ததால் காரில் வந்தவர்கள் சிறு காயத்துடன் தப்பியுள்ளனர்.
அதனை தொடர்ந்து காரை பூட்டிவிட்டு மாற்று வாகத்தில் அவர்கள் சென்றுவிட்டனர்.இந்நிலையில் விபத்துக்குள்ளாகி நின்ற காரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த மீயூசிக் சிஸ்டத்தை திருடியதுடன் காரின் நான்கு சக்கரங்களிலும் கற்களை முட்டு கொடுத்து விட்டு 4 சக்கரங்களையும் திருடிச்சென்றுள்ளனர்.காரை மீட்க வந்த உரிமையாளர் காரின் சக்கரங்கள் இல்லாமல் தரையோடு தரையாக கிடந்த காரை கண்டு மீட்க முடியாமல் திரும்பியுள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வார காலமாக கார் விபத்துக்குள்ளான இடத்தில் சாயையோரம் ஆபத்தான வளைவில் கிடக்கிறது. இதனால் இருபுறமும் வரும் வாகனங்கள் அச்சத்துடன் அவ்விடத்தை கடந்து செல்கிறது.காரை அப்புறப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்பனார் கோவில் காவல் நிலையத்தில் கேட்ட போது விபத்து குறித்து எவ்வித புகாரும் தங்களுக்கு வரவில்லை என தெரிவித்தனர்.
24 மணி நேரமும் போக்குவரத்து உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் திருட்டு போன நிலையில் 1 வாரத்திற்கு மேலாக கார் அப்புறப்படுத்தாமல் இருப்பது மேலும் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் காரை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்பது போல விபத்துக்குள்ளாகி கிடந்த காரில் இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் திருடிய கொடியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.