ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மகனாகப் பிறந்தவர் தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், இளம் வயதிலேயே வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்ற போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்தவர். மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டு போராடினார்.
பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 ஆம்
ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர். இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் இன்று (ஏப்.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக , தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.