திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மருதாண்டக்குறிச்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் கருப்பண்ணன் .இவரது மனைவி மருதாம்பாள். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையில் அவர்களது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தின் கிளை முறிந்து வீட்டின் கூரையின் மேல் விழுந்ததில் கூரை சேதமடைந்து வீட்டிற்குள் இருந்த மருதாம்பாள் மீது விழுந்தது. இதில் மருதாம்பாள் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சேதமடைந்த வீடு மற்றும் காயமடைந்த மருதாம்பாளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.