இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தப்பி, இந்தியா (தமிழகம்) வந்தனர். அவர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லாததால் அவர்களை கைது செய்த போலீஸôர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைந்திருந்தனர்.
முகமது சாஹிப் தம்பதியர் இலங்கையில் பலகோடி ஹவாலா உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து தப்பி வந்ததாகவும், இலங்கையில் போலீஸôர் அவர்களை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் தமிழகத்தில் அகதிகள் முகாமில் இருக்கும் விவரம் தெரிந்து இலங்கை அரசு அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சியில் இறங்கியது. அந்த வகையில் இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய மாநில அரசுகள் மூவரையும் இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுத்தன. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்த முடிவையும், அது குறித்த தகவலையும் அரசு சார்பில் முகாமிலிருந்த அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து எனவும், தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கூறி இலங்கை செல்ல மறுத்து வந்தனர். என்றாலும் குறிப்பிட்டபடி நேற்று அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க ( நாடு கடத்த) அகதிகள் சிறப்பு முகாம் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து 3 பேரையும் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அவர்கள் மறுத்தனர். என்றாலும் வலுக்கட்டாயமாக போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி அகதிகள் சிறப்பு முகாம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றில் முகமது சாஹிப் மற்றும் குடும்பத்தினரை, முகாம் அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்தபோது, அவர்கள் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இலங்கை சென்றடைந்ததும், இலங்கை அரசு முகமது சாகிப் மற்றும் அவரது மனைவியை கைது செய்ய தயாராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.