மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை-
கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீசார் வேனில் ஏற்றினர். ஆனால் வேனை செல்ல விடாமல் சக விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் அதே பகுதியில் ஓரமாக நின்று கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்