நெல் கொள்முதலை தனியாருக்கு விடக்கூடாது என்று தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முன்பு நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பழனிஅய்யா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில்
விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை, 1975ல் துவங்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கிராமங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் நிரந்தரக் கட்டிடங்களுடன் செயல்படும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைப்பதற்கான நிரந்தர குடோன்களும் உள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்வதற்கான நவீன அரிசி ஆலைகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை பரவலான கொள்முதல் மூலம் இந்திய உணவுக் கழகத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து கொடுத்து வரும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்திடும் வகையில் நடப்பாண்டில் (2024-25) டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்திட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒன்றிய அரசு நிறுவனங்கள் மூலம் நேரடியாக நெல்கொள்முதல் செய்தால், மாநில அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையும் நிறுத்தி விடுவார்கள். இது விவசாயிகளை பாதிக்கும். எனவே
ஒன்றிய அரசு அறிவித்துள்ள தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு முழுக்க, முழுக்க ஒரு கூட்டுறவு நிறுவனமோ, பொதுத்துறை நிறுவனமோ அல்ல. இந்த கூட்டுறவு இணையத்தில் இடைத்தரகர்கள், தனியார் வியாபாரிகள், வாகன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெறும் அமைப்பாகும். கொள்முதல் செய்வதற்கான எந்த உள்கட்டமைப்புகளும் இல்லாத தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதியளிப்பது நாளடைவில் நெல்கொள்முதலை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் முயற்சியாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதலை செய்திட வேண்டும், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள தேசிய வேளாண் சந்தைபடுத்துதல் திட்டம் விவசாயிகளுக்கு எதிரானதாகும். ஒன்றிய அரசு விவசாயிகள் விரோத தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் மாற்றம் என்ற நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கரும்பு சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ், திருவையாறு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராம், விதொச மாவட்ட தலைவர் பிரதீப் ராஜ்குமார், விவசாய சங்க நிர்வாகிகள் உதயகுமார், பாலு, கருப்பையா, சிபிஎம் மாநகர செயலாளர் வடிவேலன், சிபிஎம் நிர்வாகிகள் அபிமன்னன், சரவணன், குருசாமி மற்றும் ரவி, ராஜா, பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2025/02/arbattam08.jpg)