புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் இருந்து பேரணி நடந்தது.
பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமாரவேலு துவக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி ஹெச் டி ஓ ஏ மாநில செயலாளர் இளங்கோவன், டிஎன் ஆர்விஏ மாவட்டச் செயலாளர் முரளி , மாவட்ட தலைவர் சந்திர போஸ், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திர மாநில அரசின் ஓய்வூதிய திட்டம் இரண்டில் எது தமிழ்நாட்டின் பொருத்தமானது என்பதை தமிழக முதல்வரிடம் கலந்து பேசி முடிவை அறிவிப்போம் என்று நிதி அமைச்சர் கூறியபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . பணிக்கொடை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பூங்கா எதிரில் இருந்து பனகல் கட்டிடம் வரை பேரணி நடந்தது. இதில் பிச்சை முத்து, தன்ராஜ், சுலேகா, மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.