மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் (40).இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஆறு பேர் மதனை இரும்பு பைப்பால் அடித்து, ஆடைகளை கிழித்து எரிந்து அவரது கால், உடல் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதே போல உப்பனாற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மதனின் சகோதரர்களான சுரேஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் அதே மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து வெட்டிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்நிலையில் வினோத், கட்ட ராஜா என்கின்ற பூர்னச்சந்திரன், குற்றாலீஸ்வரன்,விக்னேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மதனை வெட்டும் பொழுது அருகில் இருந்தவர்கள் செல்போன் மூலம் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.