கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், செல்வ நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்.
செல்வ நகர் பகுதியில் அவர் வைத்துள்ள குடோனில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி தனித்தனியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் அந்த குடோனுக்கு அருகில் உள்ள முள் காட்டில் மர்ம நபர் ஒருவர் வைத்த தீ மளமளவென பற்றி
அருகில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு ஜெரால்டு அளித்த தகவலின் பெயரில், அப்பகுதிக்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை, 2 மணி நேரத்திற்கு மேலாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராடி வருகின்றனர்.
மேலும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் வருவதற்குள் அந்த குடோனில் கொட்டப்பட்டிருந்த 5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதம் இதன் மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தீ விபத்து நடப்பதற்கு காரணமான மர்ம நபர் யார் என்பது குறித்து, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.