தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும் ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக கம்மம் நோக்கிச் ஓட்டி சென்றான். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் ஆம்புலன்ஸ் செல்லும் இடங்களை வைத்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து பின் தொடர்ந்தனர். சினிமா பாணியில் போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் சிட்யாலா என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து எஸ்.ஐ. ஜான் ரெட்டி வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி பிடிக்க முயன்ற நிலையில் எஸ்.ஐ. ஜான் ரெட்டியை இடித்துவிட்டு நிற்காமல் வேகமாக சென்றான். இதுபோன்று கோர்லபஹாட் டோல்கேட்டிலும் நிறுத்தாமல் அங்குள்ள தடுப்பை இடித்து கொண்டு ஆம்புலன்சை ஓட்டி சென்றார். இதனையடுத்து எஸ்.ஐ. ஜான்ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஐதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக சூர்யாபேட்டை மாவட்டம் தெக்குமட்லா அருகே சாலையின் மூசி நதி பாலத்தின் குறுக்கே லாரிகளை நிறுத்திவிட்டு ஆம்புலன்சை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் வேறு வழியில்லாமல் சாலைக்கு இடதுபுறம் திருப்ப முயன்று அம்புலன்ஸ் அங்குள்ள கல்வெட்டு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து கேட்டப்பள்ளி எஸ்.ஐ. சிவதேஜா அந்த நபரை பிடித்து விசார நை செய்து வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஹயாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதும் மீண்டும் கம்மம் செல்வதற்காக ஆம்புலன்சை திருடி சென்றதும் தெரிய வந்தது. அம்புலன்ஸ் விபத்தில் காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவரது மனநிலை சரியாக இல்லை என்பது அவரது நடவடிக்கையில் இருந்து தெரிவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உறவினர்களை வரவழைத்து விசாரித்தால் முழுவிவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.