கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய நீதிமன்ற வளாகம் முன் செல்லும் ராணி மங்கம்மாள் சாலையானது பசுபதிபாளையம் பகுதியையும், வாங்கல் வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனூரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு சேதம் அடையும் சூழ்நிலையில் பராமரிப்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ராணி மங்கம்மாள் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சரி செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் திடீரென 10 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், அந்த சாலையை பயன்படுத்தும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் 1 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்ட சாலையில் பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த சாலையின் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மீது, அப்பகுதி பொதுமக்கள் “பாதாள சாக்கடை பணிகள் துவங்கவில்லை, மாநகராட்சியில் பணம் இல்லையா?” என்ற கேள்வியுடன் வாசகம் எழுதி வைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.