நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடமையின் பாதையை ஒட்டி இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் ஜனாதிபதி மாளிகை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து கடமையின் பாதைக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரதமர் மோடி வரவேற்றார. பின்னர், டில்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்முதேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கிது. இதில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல். சிசி கலந்து கொண்டார்.
டில்லி குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உ.பி. ஆந்திரா, குஜராத், அசாம்,மகாராஷ்டரா உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. தமிழகத்தின் சார்பில், சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட அலங்கார வண்டி இடம் பெற்றது.
வண்டியை ஒட்டி நாதஸ்வரம், தவில் இசைக்கு ஏற்ப, தமிழக கரகாட்ட கலைஞர்கள் கரகாட்டம் ஆடியபடி வந்தனர். அலங்கார வண்டியில் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி, வேலு நாச்சியார், அவ்வையார், பாரதநாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி உள்ளிட்ட பெண்களின் உருவம் இடம் பெற்றிருந்தது. தமிழகத்தின் சார்பில் இடம்பெற்ற வண்டி குடியரசு தின விழாவில் பங்கேற்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்முறையாக மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.