Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா கடந்த மாதம் 30-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பகல்பத்து விழா 31-ந் தேதி ஆரம்பமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

பகல் பத்தின் கடைசி நாளான இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி,பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து நீண்ட முடியுடன் பெண் கோலம் பூண்டு, (மோகினி அலங்காரம்), பகல் பத்து மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அரையர் சேவையுடன் பொது ஜன சேவையும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பகல்பத்து மண்டபத்திலிருந்து புறப்பட்டு ஆரியபட்டாள் வாசலை அடைந்து திருக்கொட்டாரம்
பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சென்று சேருகிறார்.

நம்பெருமாள். இதைத் தொடர்ந்து ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார் நம்பெருமாள் மோகினி அலங்கார சேவையையொட்டி மாலை 4.30 மணிக்கு மேல் முத்தங்கி சேவை கிடையாது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை (10 – ந்தேதி) அதிகாலை நடக்க உள்ளது.இதற்கென உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 4.15 மணியளவில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார்.தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வளம் வந்து நாழி கேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம் பெருமாள்,துரைப்பிரதட்சணம் வழியாக சொர்க்கவாசல் பகுதிக்கு வருவார்.காலை 5.15 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.அப்போது நம் பெருமாள் பக்தர்கள் புடை சூழ சொர்க்க வாசலை கடந்து, ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1 1/4 மணி அளவில் மூலஸ்தானம் சேருவார்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருவரங்கம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.திருவரங்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.