மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. இதில் மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர் தலைமையில் 19 மீனவ கிராமங்கள் சுருக்கு மடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பூம்புகார் மீனவ கிராமத்தினர் தலைமையில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாக செயல்பட்டு பல்வேறு கிராமங்கள் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுருக்குமடி இரட்டை மடி வலைகள் மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ள நிலையில், சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கப்பட்டு வருவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில்
இருதரப்பை சேர்ந்த மீனவ கிராமங்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏட்டப்படவில்லை. இந்நிலையில் சுருக்குமடி இரட்டைமடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்திய விசைப்படகுகளை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி
இன்று மாவட்ட தலைமை மீனவ கிராமத்தினர் தரங்கம்பாடியில் தரங்கம்பாடி தலைமை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் 19 மீனவ கிராமத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து கடைகளை அடைத்து தரங்கம்பாடி கடைவீதியில் பெருந்திரளாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தால் 19 மீனவ கிராமங்களில் 2000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து கண்டன உரையாற்றிய மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த நிலையில் மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பத்து தினங்களுக்குள் சுருக்குமடி வலை எடுத்துச் செல்லும் படகுகளிலிருந்து சுருக்கு மடி வலைகள் பறிக்கப்படும் என்றும் உரிமம் இல்லாமல் இயங்கும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். 10 தினங்களுக்குள் நடவடிக்கை இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று மீனவர்கள் தெரிவித்து தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
இந்தப் போராட்ட அறிவிப்பை ஒட்டி மயிலாடுதுறை திருவாரூர் நாகை மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.