Skip to content

ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெல்லி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். இதில் பொம்மன் நிரந்தர பணியாளராகவும், பெல்லி தற்காலிக பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெல்லி ஆகியோரை மையமாக வைத்து தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படத்தை ஊட்டியை சேர்ந்த இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  கடந்தவாரம் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும்  அந்த படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெல்லி தம்பதியனரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதல்-அமைச்சரிடம் காண்பித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர்   மதிவேந்தன், தலைமை செயலாளர்  இறையன்பு, ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!