திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித அனுமதி இல்லாமலும் வளர்ப்பு யானை விதிகளுக்கு புறம்பாக, நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட யானைகள் பராமரிப்பு கமிட்டி பரிந்துரைப்படி, சென்னை தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை இந்நிலையில சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. மாவட்ட வன அலுவலர் தலைமையில், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் திருச்சி மண்டல நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான குழு மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து முகாம் வளாகத்தில் யானை அடக்கம் செய்யப்பட்டது.
