கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினார்கள் .இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கோவை ராம் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். பாஜக தொண்டர்களை நேரில் பார்த்து அண்ணாமலை ஆறுதல் கூறி ஆர்ப்பாட்ட நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில்,
திமுக அரசு பாஜகவை பார்த்து பயப்படுகிறது. பாஜக முறையாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல்துறை கொடுக்கவில்லை எனக் கூறினார். திமுக அரசு தமிழக முழுவதும் பலவிதமான போதை பொருட்களை விற்பனை செய்து, இளைய சமுதாயத்தை சீரழித்து வருவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது எனக் கூறிய அண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் மரணமடைந்தவர்கள் அனைவரும் ஏழை எளிய மக்கள், இறந்த 55 நபர்களுமே கூலி தொழிலாளர்கள். கூலி வேலை செய்து 25 ரூபாய்க்கு சாராயம் குடித்து மரணித்திருக்கிறார்கள் என வேதனை பட்டார். கள்ளச்சாராயத்தை அனுமதித்ததற்க்கு திமுக தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டும், நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எங்கள் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு இருக்கிறது என்றார். இது தொடர்பாக நாளை பாஜக குழு தமிழக ஆளுநரை நேரில் சென்று சந்திப்போம் என்றார். செங்கல்பட்டில் நடந்த விழாவில், ஒரு குற்றவாளிக்கு அமைச்சர் செஞ்சு மஸ்தான் கேக் ஊட்டி விடுவதே தமிழக அமைச்சர்களின் முகத்திரையை கிழிப்பதாக உள்ளது என்றார். உள்துறை அமைச்சருக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயண மரணம் குறித்து கடிதம் எழுதி இருப்பதாகவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடந்தால் மட்டும் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்றார். வாராவாரம் கள்ளச்சாராய கண்காணிப்பு குழு கூட்டம் நடப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார், அது முழு பொய் அப்படி கூட்டம் நடந்திருந்தால் அதன் ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்கள் மரணம் குறித்து எப்பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சிகள், முதல் குரல் எழுப்புவார்கள் ஆனால். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அமைதி காப்பதை பார்த்தால், இதைவிட வெட்கக்கேடு எதுவும் இல்லை என்றார். செல்வப் பெருந்தகை, திருமாவளவன் ஆகியோர் அமைதி காக்கின்றனர். இதுவரை ஒரு கண்டன குரலும் பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இத்தனை மரணங்கள் நடந்த நிலையில் டிஜிபியும், முதல்வரும் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நடந்தவற்றை கவனத்திற்கு கொண்டு வேண்டும் என்றார்.
கல்வராயன் மலை உச்சியில் இந்த சாவுகள் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டிய அவர், கள்ளக்குறிச்சி நகரில் மையப்பகுதியில் இந்த மரணங்கள் நடந்தேறி இருக்கின்றன எனக் கூறினார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, குடித்தபின் நிவாரம் கொடுப்பது சரியாகுமா என கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எதிரொலிக்கும் என தெரிவித்தார். காவல்துறை கடமையை செய்து இருக்கிறது, என்னை யாரும் வீட்டில் கைது செய்யவில்லை என்றார். இன்று நடந்த பாஜக போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனக் கூறியவர், சட்டத்திற்கு கட்டுப்படுகிறோம் என்றார். நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களுக்காக போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.