சென்னை, அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில் வீடுகளில் வேலை பார்க்கும் 45 வயது தனம் என்பவரின் அக்கா மகள் செல்வி பேஸ்புக்கில் அறிமுகமான திருப்பூர் மாவட்டம் காளிமுத்து என்பவரை 3வருடங்களாக காதலித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து சென்ற சில நாட்களில் காளிமுத்து மனைவி செல்வியை சந்தேகப்பட்டு சைக்கோ போன்று கொடுமைப்படுத்தியதால் கணவனை பிரிந்து செல்வி தனது அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் பிரிந்திருந்த கணவன்- மனைவி இருவரையும் சேர்ப்பதற்காக காளிமுத்துவின் உறவினர்கள் சமரசம் பேசுவதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால் செல்வி கணவனுடன் வாழ பிடிவாதமாக மறுத்துள்ளார் .
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த காளிமுத்து வேலையை விட்டுவிட்டு கடந்த 3 மாதமாக திருவொற்றியூர் பகுதியில் மட்டன் சிக்கன் கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். சைக்கோ காளிமுத்து மனைவி செல்வியை தீர்த்து கட்டுவதற்காகவே வேவு பார்ப்பதற்காக அடிக்கடி மனைவியின் வீட்டருகே நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே மனைவி வீட்டருகே முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வீட்டை சுற்றி சுற்றி வந்திருக்கிறார். இன்று காலை அதே போன்று வீட்டு வாசலில் நின்று நோட்டமிட்டு இருந்த காளிமுத்துவை வாசலில் கோலம் போட வந்த சித்தி தனம் கோபத்துடன் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். தனம் கழுத்து அறுபட்ட நிலையில் துடிதடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார், தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.