மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆதீனகர்த்தரை அப்பகுதி மக்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வருவதும், அப்போது ஆதீனகர்த்தர் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதும் வழக்கம். பட்டண பிரவேச நிகழ்வில் மனிதனை மனிதன் சுமப்பதற்கு திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை அப்பகுதி பொதுமக்கள் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசில கட்சியினர்இன்று மாலை மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு
திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று இரவு மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. மயிலாடுதுறை நகர் விஜயா திரையரங்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.