மயிலாடுதுறை தருமபுர ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டணப்பிரவேச கோலாகல விழா நேற்று இரவு ஆதீனத்தில் நடைபெற்றது. .
தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தங்க ருத்ராட்சை திருஆபாரணங்கள் பூண்டு, தங்க கொறடு பாதரட்சை அணிந்து, ஆதினத் தம்பிரான்கள் மற்றும் திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். பல்லக்கு தூக்குவதற்காகவே மான்யம் அளித்து வைத்துள்ள நான்கு நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர, மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள், முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டாம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் அமர்ந்த பல்லக்கை பிரத்யேகப் பக்தர்கள் தூக்கிக்கொண்டு வீதியுலா சென்றனர்.
ஆதீனத்தை பொதுமக்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு சன்னிதானம் ஆசி வழங்கி திருநீறு வழங்கினார். பட்டணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். வீதியுலா முடிவடைந்து ஆதீன குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் ஆதீனகர்த்தர் எழுந்தருளி
பாவனாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார். இவ்விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் நாகை மாவட்டங்களை சேர்ந்த 360க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.