மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் கொண்டு அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும் அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று
அழைக்கப்பட்டு தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு. எனவே இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவன் திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஐந்து கால யாகசாலை பூஜை இன்று காலை நிறைவுற்று , பூர்ணாவதி மேற்கொள்ளப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை அடுத்து ராமன், லட்சுமணன், சீதை,திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்
உள்ளிட்ட சுவாமிகள் முன் செல்ல கடமானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.