திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் தாக்கியது. இதை அறிந்த அப்போதைய அமைச்சர் ஆவடி நாசர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார். இந்த தகவலை அறிந்த முதல்வர் ஸ்டாலின், டானியாவுக்கு தனியார் மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார். அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றது. தற்போது டானியா நலம்பெற்று பள்ளிக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த சிறுமி டானியா தனது பெற்றோருடன் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அப்போது பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையினையும் முதல்வர் டானியாவிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, எம்எல்ஏ சா.மு. நாசரும் உடனிருந்தார்.