Skip to content
Home » தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

தமிழ்ப் பல்கலை.யில் 2017-18-ல் ஆண்டுகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் பணி நியமனம் செய்தார். அவர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. 2021-ல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட வி.திருவள்ளுவன், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படும் 40 பேரையும் தகுதிகாண் பருவம் அடிப்படையில் நிரந்தரப் பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்று கூறி, அவரை கடந்த அக்டோபர் 20-ம் தேதி, பணியிடை நீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் க.சங்கரை பொறுப்பு துணைவேந்தவராக ஆளுநர் நியமித்தார். இந்நிலையில், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை சங்கர் உருவாக்கி வருவதாலும், பல்கலை.யில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், அவர் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொறுப்பு பதிவாளரான சி.தியாகராஜன் ஆணை வெளியிட்டுள்ளார். மேலும், அவருக்குப் பதிலாக, ஆட்சிக்குழுவில் துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமிக்கப்படும் வரை, ஆட்சிக்குழு உறுப்பினர் பெ.பாரதஜோதி துணைவேந்தர் பணியை கவனிப்பார் எனவும் அந்த ஆணையில் தெரிவித்துள்ளார். இதேபோல, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான விசாரணை ஆணைய வரம்புக்குள் பொறுப்பு பதிவாளராக உள்ள தியாகராஜன் இருப்பதாலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் அவரை் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக, மறுஆணை பிறப்பிக்கும் வரை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப் பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் பொறுப்பு பதிவாளாராக இருப்பார் எனவும் பொறுப்பு துணை வேந்தர் சங்கரும் ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறாக இருவரும் ஒருவரையொருவர் நீக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் பல்கலை. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.