தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அன்னப்பன்பேட்டை உட்பட10க்கும் அதிகமான கிராமங்களில் கோடை நெல் சாகுபடிக்காக விதை தெளிக்கப்பட்டு நாற்றுகள் லேசாக வளர்ந்து வரும் நிலையில் இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன.
பாபநாசம் உட்பட சுற்றுப்பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடியை முன்கூட்டியே தொடங்கி உள்ளனர். கோ 51ரக விதை நெல்லை வாங்கி நாற்றங்காலில் விவசாயிகள் தெளித்துள்ளனர். அவை லேசாக வளர்ந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வயலில் இறங்கி உருண்டு புரண்டு நாற்றங்காலை சேதப்படுத்தி உள்ளன.
எனவே காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.