Skip to content

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை பாதுகாக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் (TBGPCCR Project) தஞ்சாவூர் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்தின் மூலம் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் கடல் தாழைகள் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல்பகுதி 11 மீட்டர் ஆழம் வரை உள்ளது. இந்த பகுதியில் தான், அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசுக்கள் காணப்படுகின்றன. இவைகள் ஒரு நாளைக்கு 40 முதல் 45 கிலோ வரை கடல் தாழைகளை உணவாக உட்கொள்கின்றன. எனவே, கடல் தாழைகளை வளர்க்கும் நோக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வல்லவன்பட்டினம் கிராம கடல் பகுதியில் ட்ரோன் மூலம் ஆராய்ந்து, அதில் 10 இடங்களை தேர்வு செய்து கடல் தாழைகள் வளர்க்கப்படுகின்றன. இதில், மீனவர்கள் மூலம் வேலி அமைக்கப்பட்டு, எளிதில் மக்கக்கூடிய சணல் மற்றும் தென்னங்கயிறுகள் ஒரு சதுர மீட்டர் அளவுள்ள மூங்கில் சட்டங்களில் பின்னப்படுகின்றன. அவற்றில் கரும்புத்தாழை (Cymodocea serrulatta), அருகுத்தாழை (Halodule pinifolia), ஊசித்தாழை (Syringodium Isoetifolium) ஆகிய கடல் தாழைகளின் தரையடித்தண்டுகள் சதுர மீட்டருக்கு 52 வீதம் கட்டப்பட்டு, பின்னர் கடலிற்கு அடியில் (நடவு) மீனவர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சென்று, நடவு செய்தனர். அவற்றின் வளர்ச்சி கடல் உயிரின ஆராயிச்சியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு வளர்க்கப்படும் கடல் தாழைகள், அடுத்த சில ஆண்டுகளில் ஐந்து முதல் பத்து மடங்கு வளர்வதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இறால், நண்டு, மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் கடல் தாழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், ஓம்கார் பவுண்டேஷன் உதவி இயக்குநர் அன்பு மற்றும் மீனவர்கள் கடல்தாழைகளை படகில் சென்று, கடலுக்குள் நடவு செய்து வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
error: Content is protected !!