Skip to content

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திரத்தையொட்டி குலதெய்வ கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பள்ளியக்கிரஹாரம் சிறை காத்த அய்யனார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வெளியூர் பக்தர்கள் நேற்று இரவே வந்து தங்கி வழிபட்டு சென்றனர்.

அதன்படி, தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள வலம்புரி விநாயகர் மற்றும் வெற்றிவேல் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி காலை 7 மணிக்கு மூலவருக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மேலவஸ்தா சாவடி குளக்கரையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவடி, அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர், முருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல்,

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில் உள்ள பால விநாயகர் கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை பால் அபிஷேகம் நடந்தது.

முன்னதாக ஏராளமான பக்தர்கள் காவிரி நகர் தென்பகுதியில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். பின்னர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது.

பின்னர், சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் வங்கி ஊழியர் காலனியில் வசிப்பவர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள செல்வ ராஜகணபதி கோயிலில் தனி சன்னதில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சண்முகார்ச்சணை ஆகியவை நடந்தது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் செல்வ ராஜகணபதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை அம்மன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது. இக்கோயிலில் அனைத்து சிறப்பு நாட்களிலும் வழிபாடு அர்ச்சனைகள் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடந்தது. மேலும் சண்முகார்ச்சனையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. தொடர்ந்து கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 1000 பேருக்கு மேல் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!