தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமரன் வரவேற்புரை வழங்கினார். இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் காட்சி பொருட்களாக நிலச்சரிவை முன்கூட்டியே கணிக்கும் கருவி,ஸ்மார்ட் குப்பை தொட்டி, மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்காமல் தடுப்பது,கைவினைப் பொருட்கள், எளிதில் மக்கும் பொருட்களை கொண்டு தயாரித்தல் போன்ற காட்சி பொருட்களை படைத்திருந்தனர்.
மேலும் அபூர்வ தாவரங்கள், இயற்கை மூலிகை செடிகள், மருத்துவ செடிகள் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த பசுமைத் தோட்ட கண்காட்சி அமைப்பு அதிசயிக்கத்தக்க வகையில் இருந்தது. இது அனைவரின் பாராட்டையும் பெற்றது. நிகழ்ச்சியை பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அமர்நாத் தொகுத்து வழங்கினார்.
தஞ்சை சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டுகளித்தனர். அனைத்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் பள்ளி நிர்வாகக்குழு தலைவர், செயலர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரபாகர், பூண்டி இளவல் சூர்யபிரகாஷ் ஆகியோர் பெரிதும் பாராட்டினர். சுந்தர்பிரகாஷ் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். கல்லூரி பேராசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றி சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.