தஞ்சை கரந்தை, பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை கீழவாசலில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக மூட்டைகளுடன் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர் கரந்தை, பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் கீழவாசல் எஸ்.டி.எம் நகரில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த அரிசியையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக தஞ்சை கீழவாசல் பகுதி டவுன் கரம்பை வள்ளுவர் தெருவை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஹரிஹரன் (24) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.