தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முகாமை தலைமை வைத்து தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 என மொத்தம் 610 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, எக்ஸ்ரே உட்பட முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் உடல் நலப் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான முழுமையான சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லியோ,உதவி நிலை மருத்துவ அதிகாரி அருணா முத்து மகேஷ், டாக்டர் நல்லதம்பி மற்றும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் குழுவினர் தேவையான உதவிகளை செய்தனர். ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் பலர் செய்திருந்தனர்.