தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு சுஜாதா அறிக்கையில் கூறியதாவது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்குத் தேவையான உரங்களான யூரியா 10269 மெட்ரிக் டன், டிஏபி 2835 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2055 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5170 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1384 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் வெளிப்பாடாக சென்னையில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் தஞ்சை மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் யூரியா 2600 மெட்ரிக் டன் வர உள்ளது. மாவட்டத்திற்கு வந்தடையும் உரங்கள் பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான திருவாரூர் ,நாகப் பட்டினம்,மயிலாடுதுறையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேலும் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு சுமார் 1,38,000 ஹெக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 89161 ஹெக்டேர் பயிரிட பட்டுள்ளது. மீதமுள்ள பரப்புக்கு நடவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் விவசாயிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் குறித்து அவ்வப்போது கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறது . நெற்பயிர்களில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தழைச் சத்தினை( யூரியா அளவினை) பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு மேல் பயன்படுத்தாமல், தேவையான அளவில் இட தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், ஆகியவற்றை பயன்படுத்தி மண்வளத்தினை பாதுகாத்திடவும், யூரியா இடும் போது, பிரித்து வேப்பம் புண்ணாக்குடன் கலந்து பயன்படுத்தவும்.