மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முடியாதென்ற முடிவு நம் வாழ்க்கையை முடமாக்கும். முடியுமென்ற தீர்வு நம் சாதனையை திடமாக்கும். முனகுகிறவனுக்கு எந்நாளும் விடியாது என்பது நிதர்சனமான உண்மை. பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி அவநம்பிக்கை உள்ள மனம் வாழ்வை பின்னோக்கி வழுக்கித் தள்ளுவது உண்மைதானே.
எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள் நம்மை எப்போதும் வியக்க வைக்கின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (27). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னிடம் இருக்கும் குறையை பொருட்படுத்தாத பாலச்சந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது தணியாத தாகம். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது கிரிக்கெட்
பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டனர்.
தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலச்சந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் நடப்பாண்டில் தமிழ்நாடு அணியில் ஏ பி சி என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 54 பந்துகளில் 114 ரன்கள் குவித்து அனைவரது பார்வையும் தன் பக்கம் திருப்பினார். இந்த சிறந்த
கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்று தன்னை நிரூபித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். புனேவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று அசத்தினார்.
இதேபோல் கோயம்புத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு ஏ-பி அணிகளுக்கு இடையிலான மோதலில் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து சாதித்தார். இவ்வாறு பல போட்டிகளில் பங்கேற்று விருது மற்றும் கோப்பைகளை பாலசுந்தர் வென்றுள்ளார். இந்நிலையில் ஆக்ராவில் தேசிய அளவில் நடக்கும் இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க பாலச்சந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் முறையாக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக தேர்வு பெற்றுள்ள பாலச்சந்தருக்கு கிராம மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.