தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனது 107 வயது நடக்க முடியாத மாமியாரை வீல் சேரில் வைத்து அழைத்து வந்து மூதாட்டி ஒருவர் மனு கொடுத்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெம்மேலி, திப்பியக்குடியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி தனலெட்சுமி (73) தனது 107 வயது மாமியார் மற்றும் மகள், உறவினர்களுடன் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனது கணவர் கடந்த 1998-ம் ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு 2 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். நானும் எனது கணவரின் அம்மா பாக்கியம் (107) ஆகியோர் எனது கணவரின் பெயரில் உள்ள சுவிகாரர் தெரு நெம்மேலியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் எனது மகன்கள் வீரராஜ் மற்றும் பிரபு ஆகியோர் என்னையும், எனது மாமியாரையும் கடுமையாக தாக்கி வீட்டிலிருந்து வெளியில் துரத்தி விட்டனர்.
வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டனர். தற்போது இருக்க வீடு இல்லாமல் மிகவும் வயதான எனது மாமியாருடன் தவித்து வருகிறேன். எனது மாமியாரால் நடக்க கூட முடியாது. இதுகுறித்து மக்கள் குறைதீர் கூட்டத்திலும் மனு அளித்து இருந்தேன். ஆனால் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். இதனால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.