தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டில் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் குடிதண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தஞ்சை மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் மருத்துவக் கல்லூரி பகுதியில் உள்ள 47 வது வார்டில் உள்ள குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் இந்திய யூனியன், முஸ்லிம் லீக் மாநகர செயலாளர் அபுசாலி தலைமையில் நேற்று தஞ்சை மாநகராட்சி மேயரை சந்தித்து மனு அளித்தனர். இந்த மனுவில் தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டில் முல்லை நகர், விசாலாட்சி நகர், சுப்பிரமணியபுரம் , குமார் போஸ்டல் காலனி, கமலா நகர், ரத்னா காலனி, பாரதியார் நகர், சேர்வை நகர்,உப்பரிகை உள்ளிட்ட தெருக்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் நிறுவனம் சுமார் 500 அடிக்கு மேலாக ஆழ்குழாய் அமைத்து குடிதண்ணீர் விற்பனை செய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர், சொந்தமாக இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அமைத்திருக்கும் போர்களில் தண்ணீர் குறைந்து விட்டது. குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் உடனடியாக இப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் குடிதண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய் கோட்ட அலுவலர்,தலைமை செயற்பொறியாளர், வட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்,கிராம நிர்வாக அலுவலர் என பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், குடிதண்ணீர் பாதிக்கப்படுவது குறித்தும் கோரிக்கை வைத்ததில் இது நாள் வரை நடவடிக்கை இல்லை.
உடனடியாக தாங்கள் தலையிட்டு அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். இதே போல் முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் சோடா கம்பெனி பயன்படுத்தும் சிலிண்டர் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மேயரிடம் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி மேயர் உடனடியாக தனியார் நிறுவனம் தண்ணீர் எடுப்பது தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆப்தின், திமுக 47 வது வார்டு பகுதி செயலாளர் நிமல் பிரசாத், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ரமேஷ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், ரத்தினாகாலனி புருஷோத்தமன், கமலாநகர் சரவணன், முல்லை நகர் ராமலிங்கம்,பெருமாள் சுப்ரமணியபுரம் முருகையன் மற்றும் சுப்பிரமணியன், இம்தியாஸ், இப்ராஹிம்ஷா, தெட்சிணாமூர்த்தி, அக்பர் அலி, ஞானமுத்து, அனந்தராமன், சொக்கலிங்கம், ரமேஷ், ஜோசப் சகாயம், சின்னராஜ்உள்ளிட்ட 47 வது வார்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்